Wednesday, June 20, 2018

ஓய்வு நேரம்!

1948 - ஆம் ஆண்டு ஓய்வு நேரம் எது என்பதை நன்கு விளக்கியுள்ள அறிஞர் அண்ணா :

“எனக்கு ஓய்வு ஏது, இதெற்கெல்லாம் - அங்கே நரம்பு முறிய வேலை வாங்குகிறான் - அலுத்துப் படுத்தால் கட்டை போலாகி விடுகிறேன் - நான் போகவில்லை. கூத்துப் பார்க்க” - என்று கூறும் பாட்டாளி - “நமக்கு ஓய்வு கிடையாது.  ஆறுமாதத்துக் கணக்கு இன்னும் எழுதி முடித்தாக வேண்டும் ஒரு வாரத்திலே” என்று கூறும் எழுத்து வேலைக்காரர், நிரம்பியுள்ள சமுதாயத்திலே, 'ஓய்வு நேரம். ஆராய வேண்டிய பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. நமது நாட்டிலே சமூக, பொருளாளதார அமைப்புகள் மாறிக்கொண்டு வருகின்றன - நல்ல விதமான வளர்ச்சி ஏற்பட்டால், 'ஓய்வு நேரம்’ உண்மை யிலேயே, கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினையாகிவிடும் - தக்க திட்டங்கள்கூட தீட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும். இப்போது முன்னணியிலே இருக்கும் பிரச்சினைகள்  எப்படி வாழ்க்கையை நடத்துவது என்பதாகவே, பெரும்பாலான மக்களுக்கு இன்று இருக்கிறது.

எப்போது பார்த்தாலும் ஏதாவது வேலை செய்தபடி இருப்பவர்களையும் காணலாம் - வேலை ஏதும் செய்யாமல் பொழுதை ஓட்டுபவர்களையும் காணலாம். வேலை ஏதும் செய்யாமலிருப்பவர்கள் எல்லாம் 'ஓய்வாக’ இருக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. வேலை ஏதும் கிடைக்காததால் அப்படி உள்ளவர்களே ஏராளம்.

'ஓய்வு நேரம்’ - வேலை கிடைத்து அதிலே ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வேலை நேரம் போக மிச்சமிருக்கும் பொழுது வேலை செய்யும் நிலையில் இல்லாதவர்களின் காலம்’  - ஓய்வு அல்ல - அது ஒய்யாரம். வேலைக் கிடைக்காததால் வேலை செய்யாது இருப்பவர்களுக்குக் கிடைத்திருப்பது 'ஓய்வு’ அல்ல, திகைப்பு. வேலை செய்யும் மனப் பான்மையற்றவர்கள் காலத்தைக் கொலை செய்வது 'ஓய்வு’ அல்ல - அது சோம்பல். ஆக யாராவது ஒரு வேலையும் செய்யாது இருக்கும்போது அவர் ஓய்வாக இருக்கிறார் என்று கூறிவிடுவது கூடாது.

ஓய்வு வேறு. வேலையற்று இருப்பது - முற்றிலும் வேறு.

காலை முதல் மாலை வரை பாடுபட்டு வேலை செய்து பிழைக்கும் பாட்டாளிக்கு, இரவு தெருக்கோடி யில் நடைபெறும் Ôகூத்து’ ஓய்வு நேரப் பொழுது போக்காக அமைகிறது - கூத்தாடுபவர்களுக்கோ, இரவு முழுவதும் கூத்து ஆடி அலுத்து, காலையிலே படுத்துத் தூங்கி, பகலில் விழித்தபடி, புரண்டுவிட்டு, மாலை நேரத்திலே வெளியே சென்று வருவது, ஓய்வு நேரம் - பொழுது போக்கு நேரம் - வேடிக்கையாகச் சொல்வார்கள் - ரயில் ஓடும்போது போர்ட்டருக்கு ஓய்வு - ரயில் நின்று சில நிமிஷம் ஓய்வு கொள்கிறதே அப்போது போர்ட்டருக்கு வேலை - அதுபோல 'ஓய்வு நேரம்’ ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வேளை.

வேலை செய்து செய்து அலுத்து இனி வேலை செய்யவே முடியாத நிலை ஏற்பட்டு விட்டால், வேலை செய்யாமல் இருப்பதை ஓய்ந்து விட்டான் என்று கூறுகிறோம். அந்த நிலையல்ல 'ஓய்வு நேரம்’. வேலை செய்கிறான் - இடையே வேலை ஏதும் செய்யாமலிருக்கிறான் - அந்த வேலைதான் 'ஓய்வு’ இந்த ஓய்வு நேரம் - ஓய்வின் தன்மை, இதைக் கொண்டுதான், அந்தச் சமூகத்தின் நிலைமையை மதிக்கிறார்கள் அறிவாளிகள். பொதுமக்களில் பெரும்பாலானவர்களுக்குக் கிடைக்கும் 'ஓய்வு’ இருக்கிறதே, அதையே நாகரீகத்தின் அளவு கோலாகக் கொள்கிறார்கள் நல்லறிவாளர்கள்.

உழைத்துத்தான் வாழவேண்டும் - வாழ்வு, உரிமை, உழைப்பு, கடமை.

ஆனால் உழைப்பு, உடலும், உள்ளமும் முறிந்து போகாத அளவிலேயும் வகையிலேயும் இருக்க வேண்டும். வாழ்விற்கு வகை தேடுவதற்காகப் பாடுபட வேண்டும். ஆனால் படுகிறபாடு, உடல் வளத்தையும் உள்ள உற்சாகத்தையும் பாழ்படுத்தி விடுமானால், தொடர்ந்து பாடுபடும் திறன் பட்டுப் போய்விடும். உழைப்பு உருக்குலைந்து விடக்கூடாது - உடலையும் சரி, உள்ளத்தையும் சரி வாழ்விற்காக வசதி தேடு வதற்கு உழைத்து, அந்த உழைப்பிலேயே உருக் குலைந்து போகும் நிலை மனிதனுக்கு ஏற்படுமானால், அவன் முட்டையிட்டதும் செத்துவிடும் கோழிபோல், அரும்பு விட்டதும் பட்டுப்போகும் செடிபோல் காணாமலும் பயன் தராமலும் போய்விடுகிறான்.

உழைப்பு, நம்முடைய உடலையும் உள்ளத்தையும் சிதைத்து விடவில்லை. வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுக்கும், குடும்ப வளர்ச்சிக்கும்  வளத்தை தரத்தக்க வருவாயைப் பெறுவதற்காக உழைத்த நேரம் போக மிச்ச நேரம் ஓய்வு கிடைக்கிறது என்ற நிலைமை மக்களில் பெரும்பான்மையினருக்கு ஏற்பட்டால் ஓய்வு நேரம், சமூகத்தின் தரத்தையும், மனப்பண்பையும் உயர்த்தக்கூடிய சக்தி பெறும்.

நமது சமூகத்திலே இன்றைய அமைப்பில் உழவர்கள், யந்திரத் தொழிலாளர்கள்; பணிமனையில் வேலை பார்ப்பவர்கள், என்று பல 'தரம்’ இருக்கக் காண்கிறோம். யந்திரத் தொழிலாளர்களின் தொகை மொத்த ஜனத் தொகையில் கால்பங்குக்கும் குறைவு. பாதிக்குமேல் உள்ளவர்கள் உழவர்கள் - பணிமனையில் உழவர் அளவு இல்லை - அதற்கு அடுத்த நிலையினர் மூன்று வகை யினருக்கும் இன்று வாழ்க்கைத் தரம், தொழில் முறையும் அமைந்திருக்கும் நிலை. உண்மையான ஓய்வு, உள்ளத்துக்குப் புதிய உற்சாகம் தரக்கூடிய நிலை கிடைப்பது கடினம். ஒரு சிலருக்குக் கிடைக்கும் ஓய்வையும், தக்க விதத்திலே பயன்படுத்திக் கொள்ள மன வளர்ச்சிக் குறைவு; பணபலம் அதைவிடக் குறைவு.

இயற்கை நமக்குத் துரோகம் செய்து விடவும் மற்ற நாடுகளிலே உள்ளதைவிட, இயற்கை வளம் கண்டவர்கள் பொறாமைப் படும் அளவிற்கு இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் தொழில் வளம், தொழில் போதுமான அளவு பெருகாததால், தரித்திரம் தாண்டவமாடக் காண்கிறோம். புதிய முறைகளையும், கருவிகளை யும் கொண்டு இயற்கை வளத்தைப் பயன்படுத்தி மற்ற நாடுகளைவிட நாம், மிகப் பின்னணியில் இருப்பதால், இங்குச் சுவையற்ற  கவைக்குதவாத, வாழ்க்கை நடத்துவதற்கே மிகப் பெரும் பாலான மக்கள் உழைக்கிறார்கள். மனித உழைப்பு மிக மிக அதிகமான அளவிலே செலவிடப்படுகிறது - மனிதன், பிணமாகாதிருக்க; நல்வாழ்வு பெற அல்ல, முழு வாழ்வு பெறக்கூட அல்ல - சாகாமலிருக்க. ஆகவே ஓய்வு, பாட்டாளியின் வேலையின் கடினம் குறைக்கப்பட்டப் பிறகுதான் பெரும்பான்மை மக்களுக்குக் கிடைக்கும். பெரும் பான்மையினருக்கு  ஓய்வு கிடைத்து, அந்த ஓய்வை தக்கபடி பயன்படுத்தினால்தான் பாடுபடுபவருக்கு மேலும் தொடர்ந்து பாடுபடவும், திறமையுடன் பாடுபடவும் முடியும் - பிறகு பொதுச் செல்வம் வளரும், சீர் உண்டாகும்; நாடு செழிக்கும். இவைகள் எல்லாவற்றையும்விட, மனித மாண்பு மலரும், 'உழைத்தோம், வாழ்வின் பயனைப் பெறுகிறோம்’ என்ற களிப்பு முதலிலே ஏற்பட வேண்டும். பிறகுதான் ஓய்வைச் சுவைக்க முடியும்.

வேலை மனிதத் தன்மையை மாய்க்காத அளவு - இருக்க வேண்டும். வேலை நேரத்தை மட்டுமல்ல நான் குறிப்பிடுவது. வேலை முறை - தன்மை - வேலை செய்பவனுக்கு வேலை நேரத்தில் வேலைக்குத் தேவையான வசதிகளைத் தருவது - எல்லாவற்றையும் சேர்த்துத்தான் கூறுகிறேன். வேலை மனிதனை தேயச் செய்துவிட்டால், பிறகு கிடைக்கும் ஓய்வு வேளை ஓய்வு தராது - பாதி மனிதரால் ஓய்வுப் பலனைப் பெற முடியாது.

ஓய்வு, சீமான்களாக உள்ள சிலருக்கு மட்டும் உரிமையாக இருந்த காலம் உண்டு. நிலைமை இப்போது மாறி வருகிறது - ஓரளவிற்கு நம்பிக்கை தருகிற வகையில் ஓய்வு சிலருக்கும், ஓயாத வேலைத் தொல்லை மிகப் பலருக்கும் - என்ற முறையில் சமூக அமைப்பு இருக்கும்போது ஓய்வின் விளைவாக, கலை, பண்பு இவைகளை அல்ல, கருத்தற்ற களியாட்டம், வேதனையூட்டும் வெறியாட்டம் ஆணவ ஆர்ப்பாட்டம், இவைகளையே காண முடியும்.

ரோம் சாம்ராஜ்யத்திலே ஒரு விசித்திரமான அரங்கம். பள்ளத்தில் அரங்கம் - பார்வையாளர் உயரத்தில் அமர்ந்திருப்பர். அரங்கத்திலே வீரப்போர் நடைபெறும். மல்யுத்தமல்ல - வாட்போர் அல்ல - பலசாலிக்கும் வலிமை சாலிக்கும் அல்ல - மனிதனுக்கும் சிங்கத்துக்கும் சண்டை - பதைப்பதைக்கும் மனிதன், பசியுடன் உள்ள சிங்கம் - பயங்கரமான போர் பள்ளத்தில். மேலே சீமான்கள், சீமாட்டிகள் ரசிக்க, கர்ஜனை செய்யும் காட்டரசன் வாலைச் சுழற்றித் தரையில் அடிக்கும் - பயத்தால் மனிதனின் பற்கள் ஒன்றோடொன்று உராயும் - மேலே சீமாட்டிகளின் சிரிப்பொலியும், கைதட்டுவதால் எழும் வளையொலியும் கிளம்பும். சீமான்கள் சொக்குவர். இரத்தம் பீறிட்டுவரும் - மனிதனுக்கு; சீமான்கள் மேலே இருந்து ஆரவாரம் செய்வர் - Ôவிடாதே, விலகாதே’ என்று ஆயுதமற்ற மனிதனுக்கு உற்சாக மூட்டுவர். பசியாற் புதிய பலம் பெற்ற சிங்கத்தைத் தாக்கும்படி - காட்டரசன் கிழித்தெறிவான் மனிதனை கீழே - அரங்கத்தில் - மேலே மேட்டுக்குடியினரான மனித மிருகங்கள் ஓய்வு நேரத்தை ரோம் நாட்டுச் சீமான்கள் பயன்படுத்திய வகைகளிலே இதுவொன்று மனிதனை மிருகம் கொல்வது - கண்டுகளிக்கும் பொழுதுபோக்கு.

ஓய்வு சிலருக்கு - வேலை பலருக்கு - என்ற முறை மாறினாலொழிய ஓய்வு சமூக உயர்வுக்குப் பயன்படும் பண்பு ஆக முடியாது. வாழ்க்கைத்தரம் மட்டமாக இருக்கும் சமூகத்திலே ஓய்வு, கிடைத்துப் பயனில்லை, பொருளும் இல்லை. வேகாத பண்டத்தை வெள்ளித் தட்டிலே வைத்துத் தரும் வீண் வேலையாகும்.

நம் நாடு பட்டிக்காடுகள் அதிகமாக உள்ள இடம். பட்டிக்காடுகளோ உழவர்கள் வாழுமிடம். உழவர் களுக்கு ஆண்டிலே மூன்று மாதத்திற்காவது வேலை இருப்பதில்லை - ஓய்வுதான். இந்தச் சமயத்திலே அவர்கள் வீணாகப் பொழுதை ஓட்டுகிறார்கள். நேரம் வீணாகிப் போகிறது - என்று கூறி, உழவுத் தொழிலுக்கான நேரம் போக மிச்சமிருக்கும் ஓய்வு நேரத்தை உழவர்கள் பலன் தரும் பொழுதுபோக்குக்கும் செலவிட வேண்டும். உதாரணமாக அவர்கள் தேனீ வளர்க்கலாம், கோழி வளர்க்கலாம், கூடை முடையலாம், நூல் நூற்கலாம் - சிறு சிறு குடிசைத் தொழில் செய்யலாம். ஓய்வு வீண் போகாது, பலனும் கிடைக்கும். வருமானமும் உண்டு என்று கூறாத நிபுணர் கிடையாது. உழவர்களுக்காக இந்த யோசனை கூறப்பட்டாலும் சரி, பொதுவாக எல்லோருக்குமே சொல்வதானாலும் சரி, ஓய்வு நேரத்தைப் பணமாக்கும் வழிகளாக்கும்போது, சிக்கல் நிச்சயம் ஏற்பட்டுத் தீரும். செலவிடும் நேரம், செலவிடும் உழைப்பு, இவைகளுக்கு ஏற்ற பணம் பலனாகக் கிடைக்கிறதா என்ற கேள்வி நாளா வட்டத்திலே கிளம்பித் தீரும்; கிளம்பும்போது வாழ்க்கையி லேயே குளிர்ச்சி அதிகமாக உள்ளவர் பொழுது போக்குத் தொழிலிலே கிடைக்கும் ஒரு அணாவைக் கொண்டு அடையும் களிப்பு அதிகமாகத்தான் இருக்கும் - கலெக்டர் பங்களாத் தோட்டத்து பலாப்பழம், காலை முதல் மாலை வரை கழனியில் பாடுபட்டும் கால் வயிற்றுக்கும் கட்டி வரவில்லையே என்று கதறும் கந்தன் ஓய்வு வேளையில் உழைத்துப் பெறும் பலாப்பழத்தைவிட அதிக இனிப்புதான் - அதிக களிப்புதான் கிடைக்கும்.

No comments: